மும்பை,
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சவால்களை சமாளிப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2025-ல் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக பேட்டிங்கில் கில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அணியின் முடிவுகள் கலவையாகவே இருந்துள்ளன.
இந்த நிலையில், கில் தொடர்பாக பேசிய மேத்யூ ஹேடன்,
பல வகைகளிலும் பார்க்கும்போது, இந்தியாவுக்கு கில் ஒரு சிறப்பான கேப்டனாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய உள்ளன.
குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்லும் அளவுக்கு வலுவான நிலையில் இருக்கிறது. அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னும் சில முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
இந்த சவாலை நிச்சயம் சிறப்பாக சமாளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த இளம் வீரர் மட்டுமல்லாமல், நல்ல தலைவரும்கூட. அவரைச் சுற்றி திறமையான வீரர்கள் அடங்கிய நல்ல அணியும் உள்ளது. இருப்பினும், அந்த அணியில் இளம் வீரர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. என தெரிவித்துள்ளார்.