சண்டிகர்,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன.
பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதேவேளை, எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்திய ராஜஸ்தான் குவாலிபையர் 2 ஆட்டத்திற்குள் நுழைந்தது.
இதையடுத்து, குவாலிபையர் 2 ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின.இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜூரெல் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜடேஜா, சூர்யன்ஷியுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா கையில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
பின்னர் வந்த கேப்டன் ரியான் பராக் 11 ரன்னிலும், தசுன் ஷனகா 3 ரன்னிலும், ஆர்சர் 7 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்களுடனும், டோனவன் பெரேரா 11 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருவரும் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ரபாடா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் குஜராத் களமிறங்கி விளையாடியது.
தொடக்கம் முதல் கில், சாய் சுதர்சன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இருவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
சாய் சுதர்சன் அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கில் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார்.இதனால் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் இறுதிப்போட்டியில் குஜராத், பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது.