கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.
கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (ராஜஸ்தான், லக்னோ, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிராக), 6 தோல்வியுடன் (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத், பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களுரூவிடம் தோல்வி கண்டதால் அந்த அணியின் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பு மங்கியது.
தனது எஞ்சிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று, மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டும் கைகொடுத்தால் தான் அந்த அணி அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இது அந்த அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாகும். தோற்றால் முற்றிலும் முடிந்து போகும்.
குஜராத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) கண்டு 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. முதல் 7 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்ட அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விடும்.
முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் குஜராத் அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் நுழைய முழு திறமையையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
கொல்கத்தா:
அஜிங்யா ரஹானே (கேப்டன்), பின் ஆலென், அங்கிரிஷ் ரகுவன்ஷி. கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ரோமன் பவெல், மனிஷ் பாண்டே, சுனில் நரின், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் ஆரோரா, சவுரப் துபே.
குஜராத்:
சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்). ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது சாய் கிஷோர்.