மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை பிரேமா ராவத் புதிய உலக சாதனை படைத்துள்ளார். புனேவில் நடைபெற்ற சீனியர் மகளிர் டி20 டிராபி கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய பிரேமா ராவத், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 14 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
பிரேமா ராவத்தின் இந்த அதிரடி ஆட்டத்தால் உத்தரகாண்ட் அணியின் ரன் வேகம் மளமளவென அதிகரித்தது. குறிப்பாக, கடைசி 2.5 ஓவர்களில் ராகவி பிஸ்ட் மற்றும் பிரேமா ராவத் இணைந்து ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் உத்தரகாண்ட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இதில் ராகவி பிஸ்ட் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய பிரேமா ராவத் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, உத்தரகாண்ட் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் உத்தரகாண்ட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த பிரேமா ராவத், பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
பிரேமா ராவத் படைத்துள்ள இந்த உலக சாதனைக்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை வைத்திருந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டி20 சர்வதேசப் போட்டியில் அவர் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் 19 பந்துகளைச் சந்தித்த பாத்திமா சனா, 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சாதனையை தற்போது இந்தியாவின் பிரேமா ராவத் ஒரே ஒரு பந்தில் முறியடித்துள்ளார். இஇந்திய அணியிலும் இடம்பிடித்துள்ள பிரேமா ராவத்!
24 வயதான பிரேமா ராவத் இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார். லெக் ஸ்பின் பந்துவீச்சில் திறமை கொண்ட இவர், அதிரடியாக பேட்டிங் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதுவரை மகளிர் பிரீமியர் லீக்கில் 6 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு முன்னதாகவும் ஆர்சிபி அணி இவரைத் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.