கிரிக்கெட்

நீண்ட காலத்திற்குப் பிறகு முத்தரப்பு தொடரை வென்றது மகிழ்ச்சி: பாகிஸ்தான் கேப்டன்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டி

லாகூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.

இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் அபாரமாக விளையாடி 128 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அவிஷ்கா பெர்னாண்டோ 38 ரன்களும், பவன் ரத்நாயக்கே 65 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தனர். மேலும், தசுன் ஷனகா 17 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணி

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மாஸ் சாதகத் 5 ரன்களிலும், நட்சத்திர வீரர் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 14 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பகர் ஜமான், சாட் பைக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பகர் ஜமான், 99 பந்துகளில் 127 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.சாட் பைக் 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்த இருவரின் சிறப்பான ஆட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.

பின்னர் வந்த வீரர்களில் அராபத் மின்ஹாஸ் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 37 ரன்களும், சல்மான் ஆகா 25 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர்.இறுதியில் பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

வெற்றி

வெற்றி தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி,

நாங்கள் பந்துவீசத் தொடங்கியபோது முதல் மூன்று அல்லது நான்கு ஓவர்கள் முடிந்திருந்தன. அதன் பிறகு கிராஸ்-சீம் முறையில் பந்துவீசவும், பவுன்சர்களை வீசவும் முடிவு செய்தோம். பின்னர் ஆட்டத்தின் அடுத்த கட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கலாம் என்றும், அதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்றும் திட்டமிட்டோம். அந்தத் திட்டத்திற்குப் பிறகு நாங்கள் மிகச் சிறப்பாக மீண்டு வந்தோம்.

அதேபோல், எங்களுடைய பேட்டிங்கும் மீண்டும் சரிவைச் சந்தித்தது. ஆனால், ஃபகர் ஜமான் சிறப்பாக விளையாடி ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

நான் எப்போதும் ஒன்றைச் சொல்வேன். பகர் எப்போது எங்களுக்காக ரன்கள் குவிக்கிறாரோ, அப்போது அது நிச்சயமாக ஒரு பெரிய போட்டியாக இருக்கும்!

இளம் வீரர்கள் உண்மையிலேயே மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். முதல் போட்டியிலேயே பிண்டியில் சாட் பெய்க் விளையாடிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.அதேபோல், இங்கு அவர் விளையாடிய விதமும் சிறப்பாக இருந்தது. ஃபகர் சற்று தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், சாட் பெய்க் பொறுப்பேற்று ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.

மேலும், அராபத் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இளம் வீரர்கள் அணிக்குள் வந்து தங்களது திறமையை நிரூபிப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

உலகக் கோப்பைக்கான எங்களுடைய தயாரிப்புகளை ஏற்கெனவே மூன்று தொடர்களுக்கு முன்பே தொடங்கிவிட்டோம். அதன்பிறகு மீண்டும் ஒரு சிறப்பான தொடரை விளையாடியிருக்கிறோம். கடைசியாக பாகிஸ்தான் முத்தரப்புத் தொடரை வென்றது 2008ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போது நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முத்தரப்புத் தொடரை வென்றுள்ளோம்.இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இந்த அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT