கிரிக்கெட்

இருவருக்கும் ரூ.18 கோடி....புதிய அணிகளுக்கு மாறும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங்

இந்த வீரர்கள் பரிமாற்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அதிரடி வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இந்த வீரர்கள் பரிமாற்றத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.18 கோடி

இந்த ஒப்பந்தத்தின்படி ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.18 கோடி சம்பளத்துடன் இணைய உள்ளார். ஏற்கெனவே ரூ.18 கோடி சம்பளம் பெற்று வந்த அர்ஷ்தீப் சிங் அதே தொகையுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட உள்ளார். இதன் மூலம் இரு அணிகளும் தங்களது அணியின் முக்கிய வீரர்களை மாற்றிக் கொண்டுள்ளன.

ஹர்திக் பாண்டியா 2015ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவியுள்ளார். இடையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாகவும் செயல்பட்டார். 2024ஆம் ஆண்டு மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பி கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

மறுபுறம், அர்ஷ்தீப் சிங் 2019ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த அவர், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT