மும்பை,
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய 3 அணிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதுதொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிரேட் பேச்சுவார்த்தையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் பெயர்களும் அடிபடுகின்றன.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடக்கக் கட்டத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு அணி ஹர்திக்கை வாங்குவதில் காட்டி வரும் தீவிர ஆர்வம் இந்த விவகாரத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எல். வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் டிரேட் விவகாரத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்வதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக்கை அணியில் தக்கவைப்பதா அல்லது டிரேட் செய்வதா என்பது குறித்து அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு ஹர்திக்கை டிரேட் செய்ய அணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பல அணிகள் ஆர்வம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஹர்திக் பாண்டியாவை வாங்க அணிகள் ஆர்வம் காட்டுவதற்கு அவரது கடந்த கால ஐ.பி.எல். சாதனைகளும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, தனது முதல் சீசனிலேயே அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார். அடுத்த சீசனிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பயணம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய விரும்பும் எந்தவொரு அணிக்கும் அவரது உடல்தகுதி முக்கியமான அம்சமாக இருக்கும்.
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவர் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்பதால், அவரது உடல்தகுதி மற்றும் முழுமையான ஆல்ரவுண்டர் பங்களிப்பு ஆகியவை டிரேட் பேச்சுவார்த்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வாரா அல்லது வேறு அணிக்கு டிரேட் செய்யப்படுவாரா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.