சென்னை,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடிய அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 5 ரன்கள், இப்ராஹிம் ஜத்ரான் 11 ரன்கள், ரஹ்மத் ஷா 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் ஹஷ்மதுல்லா ஷாஹிதி, ஓமர்சாய் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை, பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ஹஷ்மதுல்லா ஷாஹிதி சதமடித்து அசத்தினார். ஓமர்சாய் அரைசதம் அடித்தார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.