ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மோங் கோக்கில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் குருனல் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய மார்ட்டின் ஆண்டர்சன் அரைசதம் அடித்தார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ராகுல் திரிபாதி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் கடைசி வரை போராடியும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.