19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் மல்லுக்கட்டியது. 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பெங்களூருவை பேட் செய்ய பணித்தார். அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 97 ரன்கள் சேகரித்தனர். சென்னைக்கு எதிராக பெங்களூரு அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும்.
அடுத்து 251 இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் களம் இறங்கினர். இமாலய இலக்கு என்பதால் வேகமாக அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் விக்கெட்டுகளை கொட்டிவிட்டனர். 19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அணி வீரர் புவனேஷ்வர் குமார் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். பும்ரா (183* விக்கெட்டுகள்), மலிங்கா (170) கூட இந்த சாதனையை எட்டிப்பிடிக்காத நிலையில் புவனேஷ்வர் குமார் அசத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 224 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.