இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் (Lancashire) கவுண்டி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
25 ஆண்டுகளாகத் தான் ஆதரித்து விளையாடிய லங்காஷயர் அணியிலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
44 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த சீசனில் லங்காஷயர் அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இருப்பினும், அந்த அணி டிவிஷன் 2 புள்ளிப்பட்டியலில் இரண்டாவது கடைசி இடத்தையே பிடித்தது.
இதற்கிடையே, 2027ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கப் போவதில்லை என்று லங்காஷயர் அணியின் புதிய கிரிக்கெட் இயக்குநர் பால் ஃபார்பிரேஸ் கடந்த மாதம் ஆண்டர்சனிடம் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு ஆண்டர்சனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
“எனது கிரிக்கெட் வாழ்க்கையை லங்காஷயர் அணியிலேயே முடித்துக்கொள்ள விரும்பினேன். ஆனால், எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்பது எனக்கே தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு கட்டத்தில் யாராவது என்னை எனது விருப்பப்படி ஓய்வு பெற அனுமதித்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.