கவுகாத்தி,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்பின்னர் வைபவ் சூர்யவன்ஷி பேசியதாவது,
நான் எவ்வாறு பயிற்சி செய்தேனோ அவ்வாறே ஆட்டத்திலும் செயல்படுத்த முயற்சித்தேன். எனது வழக்கமான ஆட்ட நடைமுறையை நம்பினேன். யார் பந்து வீசுகிறார்கள் என்பது உங்கள் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால், நான் பந்தை பார்க்கிறேன்... பந்து வீச்சாளர்களை அல்ல.’ என்றார்.