சென்னை,
இந்திய அணியில் அடுத்த 2 ஆண்டுகள் தொடர்வேன் என்று நினைத்ததாகவும் ஆனால் நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் முன்னாள் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் வேதனை தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அசத்தியிருந்தது.
35 வயதான சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது சற்று ஏமாற்றமாக இருந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ’இந்திய டி20 அணியின் கேப்டனாக அடுத்த 2 ஆண்டுகள் தொடர்வேன். ஒலிம்பிக்ஸ், மற்றுமோர் டி20 உலக கோப்பை தொடர் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், 2026-லேயே கேப்டன் பொறுப்பை இழப்பேன் என நினைக்கவில்லை. 2 ஆண்டுகளாக ஒரு தொடரிலும் தோற்கவில்லை, ஆசியக் கோப்பை, டி20 உலக கோப்பை வெற்றி என எல்லாம் சிறப்பாகப் போகும்போது மாற்றம் ஏன்? என சற்று ஏமாற்றமாக இருந்தது’ என்றார்.