டெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை கே.எல்.ராகு. முந்தியுள்ளார். அத்துடன், ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது தொடர்பான கேள்விக்கு கே.எல். ராகுல் பதிலளித்து பேசியதாவது;
”ஒவ்வொரு சீசனிலும், நான் எந்த அணிக்காக விளையாடினாலும், ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக எனது சிறந்த முயற்சியைக் கொடுக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட மைல்கற்கள் நல்லதுதான். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை அவை எனக்கு உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. இங்கு நீங்கள் கோப்பைகளை வெல்ல விரும்புவீர்கள். வெற்றி பெற்ற அணிகளில் ஒரு அங்கமாக இருக்க விரும்புவீர்கள். அதுவே எப்போதும் எனது இலக்காக இருந்து வருகிறது. எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற சாதனையை சமன் செய்வதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும். அதையே செய்ய நான் விரும்புகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.