கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா

இந்த தரவரிசையில் இந்தியா 104 புள்ளிகளுடன், 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புதுடெல்லி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் 3 புள்ளிகளை பெற்று 131 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியனான தென்ஆப்பிரிக்காவும் 3 புள்ளிகளை பெற்று 119 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் நீடிக்கிறது.

இந்த தரவரிசையில் இந்தியா 104 புள்ளிகளுடன், 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 102 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இலங்கையை (86 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி, பாகிஸ்தான் (89 புள்ளிகள்) முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை டாப் 10-ல் இடம் பெற்றுள்ளன. 8 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விதிக்கு உட்படாத அயர்லாந்து தரவரிசையில் இடம் பெறவில்லை.

இதேபோன்று, மகளிர் ஒரு நாள் போட்டி அணிக்கான தரவரிசையில், 163 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2-ம் இடத்தில் இங்கிலாந்து (128 புள்ளிகள்) உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இந்தியா (126 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்கா (100 புள்ளிகள்), நியூசிலாந்து (93 புள்ளிகள்) மற்றும் இலங்கை (89 புள்ளிகள்) ஆகியவை உள்ளன. முதல் 6 இடங்களில் மாற்றம் எதுவும் இல்லை.

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி வங்காளதேசம் 7-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்ற விதிக்கு உட்படாத தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தரவரிசையில் இடம் பெறவில்லை.