சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை மற்ற வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்காக விளையாடியவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பத்ரிநாத் கூறியதாவது: ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி , அந்த பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் யோசித்தால் அது சிறப்பானதாக இருக்கும்.
கெய்க்வாட் கேப்டனாக மிகவும் மோசமாக செயல்படுகிறார் என்பதற்காக அல்ல, ஆனால் கேப்டன்சி பொறுப்பு அவரது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரது முகத்திலேயே அவர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அந்த அழுத்தத்தை குறைக்கவே, ருதுராஜுக்கு பதிலாக சஞ்சுவை கேப்டனாக மாற்ற முடியுமா என்று யோசிக்க வேண்டும். "ருதுராஜ் விரைவில் ரன்கள் அடிக்கத் தொடங்க வேண்டும். ஓப்பனராகவும், பவர் பிளேயில் விளையாடும் வீரராகவும் ஆறு போட்டிகளில் தொடர்ந்து சொதப்புவது பெரிய பிரச்சினை. எஸ்ஆர்எச் போட்டியில் அவரது கேப்டன்சி குறைந்தபட்சம் நன்றாக இருந்தது. ஆனால் ரன் சேஸ்களில் அவர் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை".
தோனிக்கு பிட்னஸ் பிரச்சினை இருந்தாலும், சிஎஸ்கே எதிர்கொள்ளும் சிரமங்களைப் பார்க்கும்போது, டெத் ஓவர்களில் அவர் அணிக்கு மிகவும் அவசியமாகிறது. இப்போதும் கூட, 18வது ஓவரில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்தால், பந்துவீச்சாளரே அழுத்தத்தில் இருப்பார். லெங்க்த் பந்துகளும், யார்க்கர்களும் தவறிவிடும்; அவர் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிப்பார். அவரின் நிதானம் காரணமாக, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டாலும், அவர் கிரீஸில் இருந்தால் பந்துவீச்சாளருக்கு மிகுந்த அழுத்தம் இருக்கும் ” என்றார்.