கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை - ’இந்தியாவின் கொண்டாட்டத்தை அந்த வீரர் கெடுப்பார்’ - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோத உள்ளன.

சென்னை,

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் அணிகளில் நியூசிலாந்து முக்கியமானது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற சாதனையை நியூசிலாந்து வைத்துள்ளது. 2007 தொடங்கி நடந்த மூன்று டி20 உலகக் கோப்பை மோதல்களிலும் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை, 2016 டி20 உலகக் கோப்பை மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவை நியூசிலாந்து தோற்கடித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோத உள்ளன.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிராட் ஹாட்டின், “நான் இந்திய அணியில் இருந்தால் இறுதிப் போட்டியில் சந்திக்க விரும்பாத அணி நியூசிலாந்துதான். இந்திய மண்ணில் விளையாடுவதற்கு நியூசிலாந்து பயப்படாது. இங்கு டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை அவர்கள் வீழ்த்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் பின் ஆலன் சிறப்பாக விளையாடினால், இந்தியாவின் கொண்டாட்டத்தை கெடுக்கக்கூடிய ஒரே வீரராக அவர் இருப்பார்” என்று கூறினார்.