நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் திலக் வர்மா - நமன் தீர் ஜோடி சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தது.
நமன் தீர் ஆட்டமிழந்தநிலையில், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியதாவது,
ஒரு மிகச் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது இதுபோன்ற சவால்கள் எப்போதும் இருக்கும். இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால், ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால், அவர்கள் இலக்கைத் துரத்திய விதத்தையும், கடைசி நேரத்தில் எங்களிடம் சில தவறுகளைச் செய்ய வைத்த விதத்தையும் பாராட்ட வேண்டும்.
என் மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் தொடக்கத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். 180 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தும்போது, பவர்பிளேயில் எதிரணி அதிரடியாகத் தொடங்கிவிட்டால், அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இருப்பினும், நாங்கள் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்து அவர்களைக் கட்டுப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. நடு ஓவர்களில் பிரேஸ்வெல் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்; சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சில நோ-பால்கள், குறிப்பாக நோ-பாலில் விக்கெட் வீழ்த்திய சம்பவம் போன்றவை எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின. திறமையின் அடிப்படையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் எங்கள் செயல்பாடு நன்றாகவே இருந்தது. ஆனால், பீல்டிங்கில் ஏற்படும் சிறிய தவறுகள் மற்றும் கவனக்குறைவான செயல்பாடுகள் போன்ற முக்கியமான தருணங்களில் செய்யும் தவறுகள்தான் எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. என தெரிவித்தார்.