புது டெல்லி,
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றால், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
39 வயதான ரோஹித் சர்மாவும், 37 வயதான விராட் கோலியும் கடந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இதையடுத்து, இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
மேலும், 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றனர்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:
“நம்மிடம் ஒரு ‘ரெக்கார்டு ரன் மிஷின்’ விராட் கோலி உள்ளார். ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்த சிறந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. விராட் ஒரு மிகச்சிறந்த வீரர்.
இந்த முறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அணியில் இருந்தால், இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு 90 சதவீதம் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.