கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்யா, டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களம் காண தீவிரமாக தயாராகி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்காவின் 18 பேர் கொண்ட முதன்மை அணியில் நோர்க்யா இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்குகிறது.
கடைசியாக 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய நோர்க்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் களம் காணும் முனைப்பில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்காக தான் மேற்கொண்டு வரும் பயிற்சி குறித்து நோர்க்யா கூறுகையில்,
“நான் நீண்ட நாட்களாகவே சிவப்பு பந்து போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். எனது பந்துவீச்சு முறையை படிப்படியாக மேம்படுத்தவும், நீண்ட நேரம் பந்துவீசவும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டே எனக்கு மிகவும் பிடித்தமானது. சிறுவயது முதலே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகப்பெரிய கனவாக இருந்தது. மீண்டும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொப்பியை அணிவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.
நோர்க்யா இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நோர்க்யா மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.