ஐ.எல்.டி20 தொடரில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற துபாய் கேபிடல்ஸ் அணி, நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த துபாய் கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 31 பந்துகளில் 43 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 24 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பவல் வெறும் 12 பந்துகளில் 28 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டெசர்ட் வைப்பர்ஸ் தரப்பில் குவைசிமா தன்வீர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் பாபர் அசாம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஃபகர் ஜமான் 12 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து பந்துவீச வந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் எதிரணி பேட்டர்களைத் திணறடித்தார். ஜோ கிளார்க், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், டாம் கரன் ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெசர்ட் வைப்பர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலுமாகத் தகர்த்தார். அவர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே துஷ்மந்த சமீரா மற்றும் ஹசன் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இறுதியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி 17.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் துபாய் கேபிடல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நூர் அகமது ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடக்கப் போட்டியில் தோல்வியடைந்திருந்த துபாய் கேபிடல்ஸ் அணிக்கு இந்த வெற்றி நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது