கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு தேவ்தத் படிக்கல் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இதில் சாய் சுதர்சன் 40(63) ரன்கள் எடுத்தும் படிக்கல் 80(140) ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் துருவ் ஜூரெல், பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவர் 155 பந்துகளில் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். சதமடிக்க இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவைப்படும் நிலையில் அவர் 2-வது நாள் ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.
நியூசிலாந்து ஏ அணி தரப்பில் பிரேசர் ஷீட் சிறப்பாகப் பந்துவீசி 19 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜூரெல் 99 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.