கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக அபாரம்... ஒரே டெஸ்டில் இரு சதங்கள் - தினுஷா படைத்த 3 சாதனைகள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

கொழும்பு,

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் சோனல் தினுஷா, இரண்டு சதங்கள் விளாசி 3 முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

டெஸ்ட்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றநிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

தொடரை இந்தியா கைப்பற்றி இருந்தாலும், இலங்கை வீரர் சோனல் தினுஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2-வது டெஸ்ட் போட்டி டிரா ஆக இவர் முக்கிய பங்கு வகித்தார்.

இவர், முதல் டெஸ்ட் போட்டியில் 100 மற்றும் 84 ரன்களும், 2-வது டெஸ்ட் போட்டியில் 103 மற்றும் 133 ரன்களும் எடுத்து 2 போட்டிகளில் மொத்தம் 3 சதங்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் 3 முக்கிய சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

தினுஷா படைத்த 3 சாதனைகள்

1. இந்தியாவுக்கு எதிராக 29 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை

இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த 3-வது இலங்கை வீரர் என்ற பெருமையை தினுஷா பெற்றுள்ளார்.

துலிப் மெண்டிஸ் – 105, 105 (சென்னை, 1982)

அரவிந்த டி சில்வா – 146, 120 (கொழும்பு, 1997)

சோனல் தினுஷா – 103, 133* (கொழும்பு, 2026)

2. ஒரே டெஸ்டில் இரு சதங்கள் அடித்த 8-வது இலங்கை வீரர்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 8-வது வீரர் என்ற சாதனையையும் தினுஷா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்காரா, துலிப் மெண்டிஸ், அசெங்கா குருசிங்ஹா, திலகரத்ன தில்ஷன், தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

3. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதங்கள்

வெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் விளாசிய 8-வது பேட்டர் என்ற உலக சாதனையையும் தினுஷா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு அரவிந்த டி சில்வா, ஜாக் காலிஸ், ஹாஷிம் ஆம்லா, குமார் சங்கக்காரா, யூனிஸ் கான், மார்னஸ் லபுஷேன் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்களை பதிவு செய்திருந்தனர்.

இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் சோனல் தினுஷாவின் அபாரமான பேட்டிங், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமின்றி உலக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.