கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீதத்துடன் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.

டாக்கா,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியுள்ளது. இதனால் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய வங்கதேசம், 142 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு முன்னேற்றம்

இந்த தோல்வியின் மூலம் வங்காளதேச அணியின் வெற்றி சதவீதம் 55.56-லிருந்து 47.62 ஆகக் குறைந்தது. இதனால் அந்த அணி 4-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்குப் பின்தங்கியது.

இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்காளதேசம், 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு டிராவுடன் 40 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

வங்காளதேசத்தின் சரிவால் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என 68 புள்ளிகளுடன் 51.52 சதவீதத்தைப் பெற்றுள்ளது.

முதலிடத்தில் நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளநிலையில், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் முதல் இடத்திற்கும் தென் ஆப்பிரிக்கா 71.43 சதவீதத்துடன் 2-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலிய அணி 69.23 சதவீதத்துடன் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.

SCROLL FOR NEXT