கிரிக்கெட்

30 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை மேகனா

இந்திய அணிக்காக கடைசியாக 2022 அக்டோபர் மாதம் விளையாடினார்.

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எஸ் மேகனா (30)அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பயணம்

மேகனா 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதையடுத்து 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும், 17 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 114 ரன்களும், டி20 போட்டிகளில் 258 ரன்களும் எடுத்துள்ளார். இரு வடிவங்களிலும் தலா ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

மகளிர் பிரீமியர் லீக்

உள்நாட்டுப் போட்டிகளில் ரெயில்வேஸ் அணிக்காக விளையாடிய மேகனா, மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2024-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாறினார். அந்த ஆண்டு கோப்பையை வென்ற ஆர்சிபி அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

வழிகாட்ட விருப்பம்

தற்போது ஓய்வு அறிவித்துள்ள அவர், தனக்குத் துணைநின்ற குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், அணித் தோழிகள், ஆதரவுப் பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், கிரிக்கெட்டுடனான உறவு தொடரும் என்றும், அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு வழிகாட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT