Image Courtesy: @BCCI  
கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.

பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 5ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும் (206 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் (185 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் டிராவில் முடிந்ததை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பார்க்கலாம்.

இந்தப்பட்டியலில் ஆஸ்திரேலியா (100 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. இலங்கை (66.67 சதவீதம்) 2ம் இடத்திலும், இங்கிலாந்து (54.17 சதவீதம்) 3ம் இடத்திலும், இந்தியா (33.33 சதவீதம்) 4ம் இடத்திலும், வங்காளதேசம் (16.67 சதவீதம்) 5ம் இடத்திலும் உள்ளன. 6 முதல் 9 இடங்கள் வரை முறையே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா (சதவீதம் ஏதும் இன்றி) உள்ளன.