கிரிக்கெட்

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்று 4-வது போட்டி

இன்றைய ஆட்டத்தில் வாகை சூடி தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஐதராபாத்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஆட்டத்தில் களம் காணுகிறது.

இந்தியா முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

வீரர்கள் தீவிரம்

இந்திய அணியில் சாம்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் நல்ல பார்மில் உள்ளனர். ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 249 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சில் சொதப்பியதால் தோல்வி அடைய நேரிட்டது. அதற்கு 3-வது ஆட்டத்தில் பரிகாரம் தேடிக் கொண்ட இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார். அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட் டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்ற நமது வீரர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.

பேட்டிங்குக்கு சொர்க்கபுரி

20 ஓவர் கிரிக்கெட்டில் அபாயகரமான அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீசில் அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, ரோமன் பவெல், ஹெட்மயர் மிரட்டுகிறார்கள். தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் வரிந்து கட்டி நிற்பார்கள்.

ஐதராபாத்தும் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான ஒரு ஆடுகளமாகும். 2024-ம் ஆண்டில் இந்திய அணி இங்கு வங்காளதேசத்துக்கு எதிராக 297 ரன் கள் குவித்ததே அதற்கு சான்று. அதனால் முந்தைய ஆட்டங்களை போன்றே ரசிகர்களுக்கு இங்கும் ரன் விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா:

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், நிதிஷ்குமார் ரெட்டி, அக் ஷர் பட்டேல், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப்சிங்.

வெஸ்ட் இண்டீஸ்:

ஷாய் ஹோப் (கேப்டன்). கமில் பூரன், ஹெட்மயர், ரோமன் பவெல், ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது குயின் டின் சாம்ப்சன், ரோஸ்டன் சேஸ், ஷமார் ஸ்பிரிங்கர், கீமோ பால், ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி.

SCROLL FOR NEXT