கிரிக்கெட்

6 விக்கெட்டுகள்... ’இந்தியாவின் பேட்டிங் சரிவுக்கு இதுதான் காரணம்’ - பயிற்சியாளர் சாய் ராஜ்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியதற்கு பேட்டர்களின் தவறான ஷாட் தேர்வும், நிலைத்து நின்று விளையாடத் தவறியதும் முக்கியக் காரணமாக அமைந்ததாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சாய் ராஜ் பகுதுலே தெரிவித்துள்ளார்.

ஆட்டமிழப்பு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்கம் கிடைத்தும்

இந்திய அணியின் பேட்டர்கள் சிலர் நல்ல தொடக்கத்தை பெற்றபோதும், அதை பெரிய ரன்களாக மாற்றத் தவறினர். கே.எல். ராகுல் 25 ரன்களும், ரிஷப் பண்ட் 23 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களும் எடுத்தனர். ஆனால், முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானது.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சாய் ராஜ் பகுதுலே, பேட்டர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியிருக்க வேண்டும் என்றும், சில வீரர்களின் ஷாட் தேர்வில் தவறுகள் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

பந்துவீச்சிலும் தவறிய வாய்ப்புகள்

இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசத் தவறியதாகவும் பகுதுலே ஒப்புக்கொண்டார். ஆடுகளத்தில் இருந்த சீம் மூவ்மென்ட்டை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், கிடைத்த கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், நியூசிலாந்து அணியை 30 முதல் 40 ரன்கள் குறைவாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதமிருப்பதால் போட்டியில் எதுவும் நடக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

துருவ் ஜுரெல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT