புதுடெல்லி,
இங்கிலாந்து யு19 மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய யு19 மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து யு19 மகளிர் அணிகள் மோதும் டி20 தொடர் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வதோதரா மற்றும் சூரத் நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான 15 வீராங்கனைகள் கொண்ட அணிக்கு பவிகா அஹிரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பவிகா அஹிரே, விக்கெட் கீப்பர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார். துணைக் கேப்டனாக ஆனாடி டக்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயா எஸ். சவானும் அணியில் மற்றொரு விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.
பவிகா அஹிரே (கேப்டன், விக்கெட் கீப்பர்), இரா ஜாதவ், நிதி மஹ்தோ, பூர்வா சிவாச், மெஹக் நர்வாஸே, மைத்ரி மனியார், ஈஷ்வரி அவ்சரே, தீயா யாதவ், ஷ்ரேயா எஸ். சவான் (விக்கெட் கீப்பர்), சமைய்ரா ராகவ், குமாரி பாலக், உமா காஷ்வி, அக்சா பர்மர், ஆனாடி டக்டே (துணைக் கேப்டன்), பாலக் சிங்
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் வதோதராவிலும், கடைசி மூன்று போட்டிகள் சூரத்திலும் நடைபெற உள்ளன.
நவம்பர் 26: முதல் டி20 - வதோதரா - மாலை 6 மணி
நவம்பர் 28: இரண்டாவது டி20 - வதோதரா - மதியம் 1 மணி
டிசம்பர் 1: மூன்றாவது டி20 - சூரத் - மாலை 6 மணி
டிசம்பர் 3: நான்காவது டி20 - சூரத் - மாலை 6 மணி
டிசம்பர் 6: ஐந்தாவது டி20 - சூரத் - மதியம் 1 மணி
2027ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு இந்தத் தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக அமையும். இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேசப் போட்டி அனுபவத்தை வழங்குவதுடன், அணியின் பலம் மற்றும் திறமைகளை மதிப்பிடவும் இந்தத் தொடர் உதவும்.