இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அடுத்ததாக இந்தியா- நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின்ரிசர்வ் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புற்களுடன் கூடிய ஆடுகளம் மற்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையால் இங்கு தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு தாறுமாறாக எடுபடும். நேற்று லேசாக மழையும் பெய்தது. இதனால் இரு அணியும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் என திறமையான பேட்டர்கள் உள் ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது பலமாகும். மேலும் முகமது சிராஜ், குர்னூர் பிரார், அன்ஷூல் கம் போஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆவலுடன் உள்ளனர்.
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் எப்போதும் வலுவானது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, டாம் பிளென் டல், வில் யங் ஆகியோர் பேட்டிங்கிலும், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், நாதன் சுமித், ஜேக்கப் டப்பி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டக்கூடியவர்கள். இதனால் இந்தியா வுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவது இது 11-வது முறையாகும். இதில் 2 முறை மட்டுமே இந்தியா தொடரை வென்றிருக்கிறது. 1968-ம் ஆண் டில் மன்சூர்அலிகான் பட்டோடி தலைமையில் 3-1 என்ற கணக்கிலும், 2009-ம் ஆண்டில் டோனி தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் இந்தியா தொடரை சொந்தமாக்கியது. 6 முறை தொடரை இழந்துள்ளது. மற்ற இரு தொடர்கள் சமனில் முடிந்துள்ளது. மொத்தத்தில் நியூசிலாந்தில் இந்திய அணி 25 டெஸ்டுகளில் ஆடி 5-ல் வெற்றியும். 10-ல் தோல் வியும், 10-ல் டிராவும் கண்டுள்ளது.
நியூசிலாந்து அணி 2024-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அந்த மோசமான தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க நமது வீரர்க ளுக்கு இதை விட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
இன்னொரு வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து 72.22 சதவீத புள்ளியுடன் முதலிடத்திலும், இந்தியா 51.52 சதவீத புள்ளியுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் எஞ்சிய இரு தொடர்களை யும் (நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட்) கைப்பற்றியாக வேண்டும். முதலில் நியூசிலாந்து தொடரை வெல்ல வேண்டும். இதில் தோற்றால் வாய்ப்பு மங்கி விடும். அதனை உணர்ந்து இந்திய வீரர்கள் களத்தில் தீவிரம் காட்டுவார்கள் என்று நம்பலாம்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங் கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.