பெங்களூரு,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது போட்டிகளில் இந்திய அணியும், 2-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால், திட்டமிட்ட நேரத்தில் டாஸ் போட முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு தற்போது டாஸ் போடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 6 ரன்னும், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 30 (10) ரன்களும், சஞ்சு சாம்சன் 16 (7) ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 22 (14) ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது. நமன் திர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கீமோ பால் மற்றும் ஸ்பிரிங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.