கிரிக்கெட்

மழையால் பாதியில் ரத்து: சமனில் முடிந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

முன்னதாக ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது.

பெங்களூரு,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

கடைசி டி20

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றதால் தொடர் சமநிலையில் (2-2) இருந்தது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. மழை பாதிப்பு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் போட்டி 9 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.

இந்தியா பேட்டிங்

வெஸ்ட்இண்டீஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இரு மாற்றமாக நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷிவம் துபே, புவனேஷ்வர்குமார் இடம் பெற்றனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் களம் கண்டார்.

'டாஸ்' ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 6 ரன்னிலும், அடுத்து வந்த இஷான் கிஷன் 30 ரன்னிலும் (10 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 16 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

மழையால் போட்டி ரத்து

இந்திய அணி 2.5 ஓவர்களில் 50 ரன்களை கடந்து அசத்தியது. இது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேக 50 ரன் குவிப்பாகும். இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது நமன் திர் 24 ரன்னுடன் (6 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிமோ பால், ஷமார் ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி அத்துடன் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் (261 ரன்கள்) தொடர்நாயகன் விருது பெற்றார். முன்னதாக நடந்த ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT