அல் அமரத்,
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஓமனின் அல் அமரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 111 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அப்துல் காதிர் 54 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும்.
கேப்டன் பர்ஹான் யூசுப் 60 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் காவ்யா படேல் 4 விக்கெட்டுகளையும், சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆர்யவீர் சேவாக் 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.
அவருடன் கேப்டன் லக்ஷ்யா ராஜேஷ் ராய்சந்தனி பொறுப்புடன் விளையாடி 101 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். வி.கே. வினீத் 21 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். மனால் சவுகான் 32 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.
இவ்வாறு இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் மொஹித் உல்வா அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா இந்த முறை பதிலடி கொடுத்துள்ளது. மேலும், 9-வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.