கிரிக்கெட்

இந்திய மகளிர் அணிக்கு புதிய பீல்டிங் பயிற்சியாளர் – முநீஷ் பாலி மீது அதிகரிக்கும் விமர்சனம்

இந்திய மகளிர் அணியின் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் இந்திய வீராங்கனைகள் பல எளிதான கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் தரம் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், புதிய பீல்டிங் பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வரவேற்றுள்ளது.

முநீஷ் பாலி

இந்திய மகளிர் அணியின் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் இந்திய வீராங்கனைகள் பல எளிதான கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஐந்து லீக் போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 10 கேட்ச்களைத் தவறவிட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் மூன்று கேட்ச்கள் தவறவிடப்பட்டதால், அந்த அணியின் மரிசான் கப் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் இந்திய அணி லீக் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கிடையே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீராங்கனைகள் நான்கு கேட்ச்களைத் தவறவிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் மேலும் நான்கு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் இரண்டு கேட்ச்களைத் தவறவிட்டார். தீப்தி சர்மா மற்றும் கிராந்தி கவுட் ஆகியோரும் கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டனர். இதனால் இந்திய அணியின் பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் பீல்டிங் பயிற்சியாளர் முநீஷ் பாலி விமர்சனத்துக்குள்ளானார்.

புதிய பயிற்சியாளர் வீராங்கனைகளின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதுடன், பயிற்சி மற்றும் போட்டிகளின்போது பீல்டிங் பயிற்சிகளை நடத்தவும், தொழில்நுட்ப உதவியுடன் வீராங்கனைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் பொறுப்பேற்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT