டாக்கா,
பார்வையற்றோருக்கான ஆண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவை இந்திய அணி புறக்கணித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டிய இறுதிப்போட்டி மழையால் நடைபெறவில்லை. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்க மறுத்த இந்திய வீரர்கள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்காமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் டி. துர்கா ராவ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
"இறுதிப்போட்டியின்போது போட்டி நடுவர் எங்களை அழைத்து, ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை வெற்றியாளராகவும், இந்திய அணியை இரண்டாம் இடம் பிடித்த அணியாகவும் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஏனெனில், இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது இரு அணிகளும் கூட்டுச் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது" என்றார்.
இந்நிலையில், இறுதிப்போட்டி நடைபெறாத நிலையில் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு மட்டும் கோப்பை வழங்கப்பட்டதை இந்திய அணி ஏற்க மறுத்துள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மழையால் இறுதிப்போட்டி நடைபெறாத சூழலில் இரு அணிகளுக்கும் கூட்டாக சாம்பியன் பட்டம் வழங்க வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் பார்வையற்றோர் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.