துபாய்,
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெல்லியில் நடந்த இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பதம் பார்த்தது. இதே போல் வெலிங்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் டெல்லி டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய இந்திய கேப்டன் விராட்கோலி கூடுதலாக 16 புள்ளிகள் பெற்று மொத்தம் 893 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் 243 ரன், 50 ரன் வீதம் எடுத்த விராட் கோலி இந்த தொடரில் மொத்தம் 610 ரன்கள் குவித்தார். அதன் மூலம் இந்தியா தொடரை 10 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ச்சியாக மூன்று டெஸ்டிலும் மூன்று இலக்க ஸ்கோரை கடந்திருக்கிறார். இலங்கை தொடர் தொடங்குவதற்கு முன்பாக தரவரிசையில் 6வது இடத்தில் இருந்த கோலி இந்த தொடரில் வியப்புக்குரிய வகையில் 152.50 சராசரியை பெற்றதன் மூலம் டேவிட் வார்னர், புஜாரா, வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்று ஐ.சி.சி.யின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்டிலும் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்தால் ஒரே சமயத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 3வது வீரர் என்ற பெருமையை (ஏற்கனவே ரிக்கிபாண்டிங், மேத்யூ ஹைடன் இந்த சிறப்பை பெற்றுள்ளனர்) பெறுவார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 938 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இதுவரை 2வது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா 4வது இடத்துக்கு (873 புள்ளி) சரிந்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3வது இடமும் (879 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 5வது இடமும் (865 புள்ளி), ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் 6வது இடமும் (815 புள்ளி) வகிக்கிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 164 ரன்கள் சேகரித்து தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் 8 இடங்கள் எகிறி முதல்முறையாக டாப்10க்குள் நுழைந்து 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த டெஸ்டில் சதங்கள் ருசித்த இலங்கையின் மேத்யூஸ் 23வது இடத்திலும் (7 இடம் முன்னேற்றம்) இந்தியாவின் முரளிவிஜய் 25வது இடத்திலும் (3 இடம் உயர்வு), இரண்டு இன்னிங்சிலும் அரைசதங்கள் எடுத்த ரோகித் சர்மா 40வது இடத்திலும் (6 இடம் ஏற்றம்), ஆஷஸ் போட்டியில் முதல்முறையாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 27வது இடத்திலும் (16 இடம் அதிகரிப்பு) இருக்கிறார்கள்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை (894 புள்ளி) தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு (870 புள்ளி) இறங்கியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2வது இடத்திலும் (876 புள்ளி), இந்தியாவின் அஸ்வின் 4வது இடத்திலும் (829 புள்ளி) உள்ளனர். ஆஷஸ் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இரு இடம் ஏற்றம் கண்டு 8வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஷகிப் அல்ஹசன் (வங்காளதேசம்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அஸ்வின் (இந்தியா), மொயீன் அலி (இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர்.
டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணியின் (124 புள்ளி) நம்பர் ஒன் பயணம் தொடருகிறது. ஆனால் இலங்கைக்கு எதிரான தொடரில் 2 டெஸ்ட் டிரா ஆனதால் ஒரு புள்ளியை இழந்திருக்கிறது. தென்ஆப்பிரிக்கா 2வது இடத்திலும் (111 புள்ளி), இங்கிலாந்து (105 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தொடரை பறிகொடுத்த இலங்கை அணி மாற்றமின்றி (94 புள்ளி) 6வது இடத்தில் நீடிக்கிறது.