கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காயத்திலிருந்து மீண்ட ஜடேஜா

இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக கடந்த தொடரில் இடம்பெறாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை இந்திய அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

பும்ரா, சாய் சுதர்சனுக்கு உடற்தகுதி நிபந்தனை

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சனின் தேர்வு, பி.சி.சி.ஐ.யின் சிறப்புத் திறன் மையம் (COE) வழங்கும் உடற்தகுதி அனுமதியைப் பொறுத்தே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் போட்டிக்கான தேர்வுக்கு கிடைக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட்: ஆகஸ்ட் 15 முதல் 19 வரை – காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலே

2-வது டெஸ்ட்: ஆகஸ்ட் 23 முதல் 27 வரை – எஸ்.எஸ்.சி. மைதானம், கொழும்பு

டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்திய அணி ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொழும்புவில் தொடங்கும் நான்கு நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி

* சுப்மன் கில் (கேப்டன்)

* கே.எல். ராகுல் (துணைக் கேப்டன்)

* யஷஸ்வி ஜெய்ஸ்வால்

* ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

* சாய் சுதர்சன்

* துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்)

* ரவீந்திர ஜடேஜா

* குல்தீப் யாதவ்

* மனவ் சுதர்

* ஜஸ்பிரித் பும்ரா

* முகமது சிராஜ்

* பிரசித் கிருஷ்ணா

* குர்னூர் பிரார்

* தேவ்தத் படிக்கல்

* சரன்ஷ் ஜெயின்