கிரிக்கெட்

நியூசிலாந்து செல்லும் இந்தியா - குவியும் ரசிகர்கள்... 2 வாரங்களில் 50,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஆக்லாந்து,

அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி 2 வாரங்களிலேயே 50,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

12 சர்வதேச போட்டிகள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 12 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. நியூசிலாந்து மண்ணில் ஒரே சுற்றுப்பயணத்தில் வெளிநாட்டு அணி 12 சர்வதேச போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. அடுத்தடுத்த டி20 போட்டிகள் அக்டோபர் 24, 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் நவம்பர் 4, 7, 10, 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரையும், கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

2-வது டி20

கிரிக்கெட் நேஷன்'உறுப்பினர்கள், 'ஸ்கை' மற்றும் 'ஏஎன்இசட்' வாடிக்கையாளர்களுக்கான இரண்டு வார முன்பதிவு காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

இந்நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கி 2 வாரங்களிலேயே 50,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ள 2-வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளில் 75 சதவீதம் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ளன.

கூடுதல் இருக்கைகள்

இதில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளநிலையில், 2019-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பிறகு முதல்முறையாக, மைதானத்தின் 6-வது அடுக்கு இருக்கைகள் ரசிகர்களுக்காக திறக்கப்பட உள்ளன. 4-வது டி20 போட்டி அக்டோபர் 30-ம் தேதி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT