சார்ஜா,
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தி னம் இரவு நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. கேப்டன் சிகந்தர் ராசா 106 ரன்கள் விளாசினார். 40 வயதான சிகந்தர் ராசா 20 ஓவர் போட்டியில் அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தும் பலன் இல்லை.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவரது விக்கெட் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 200 விக்கெட்டுகள் (120 ஆட்டம்) கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 171 விக்கெட்டுகளுடன் (153 ஆட்டம்) 2-வது இடத்தில் உள்ளார்.