கிரிக்கெட்

ஐ.பி.எல். 2026 - குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி வாகை சூடியது.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 30-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மும்பை 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம், குஜராத் அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது.

அதன்படி பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்க வீரர்களான குவிண்டன் டி காக் மற்றும் தனிஷ் மலிவார் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 13 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த நமன் திர் சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். பிறகு களமிறங்கிய திலக் வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

45 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 101 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை துரத்திய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமலும், இவருடன் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கியவர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாருக் கான்மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இருவரும் முறையே 26 மற்றும் 17 ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியை தழுவியது.