சென்னை,
லக்னோவில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் 12 புள்ளிகள் மற்றும் +0.027 என்ற நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்குச் செல்வதற்கான கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. சென்னை அணி டாப்-4 இடங்களுக்குள் நுழைய 3 முக்கிய வழிகள் உள்ளன.
சென்னை அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் (ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக) கட்டாயம் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் சென்னை 16 புள்ளிகளை எட்டும். அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளை வீழ்த்த வேண்டும்.
இப்படி நடந்தால் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுமே 16 புள்ளிகளை பெற முடியாது. இதன் மூலம் சென்னை அணி மும்பை, லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளை விட புள்ளிகளில் முந்தி, எளிதாக டாப்-4 இடத்தைப் பிடித்து பிளே-ஆப் செல்லலாம்.
ஒருவேளை சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி, குஜராத்திடம் தோற்றுப்போனால் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும். அத்தகைய சூழலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தங்களது மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
மேலும், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். அதேபோல், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வியடைய வேண்டும். இந்த அனைத்து முடிவுகளும் சிஎஸ்கேக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கும்.
அதே நேரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றாலும், சிஎஸ்கே அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். அந்த சூழலில், குஜராத் அணிக்கு எதிராக சென்னை மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டியது அவசியம். அப்போது மட்டுமே நெட் ரன் ரேட் கணிசமாக உயரும்.
அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தங்களது மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வியடைய வேண்டும். இந்தச் சாதகமான முடிவுகள் கிடைத்தால், டாப்-4 இடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஐதராபாத் மற்றும் குஜராத் இரண்டிற்குமே எதிராக) தோற்றால், 12 புள்ளிகளுடன் அதிகாரபூர்வமாக தொடரிலிருந்து வெளியேறும். அப்படி நடந்தால், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல்முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.