பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (3 அரைச தத்துடன் 379 ரன்), ரஜத் படிதார் (318), தேவ்தத் படிக்கல் (316), டிம் டேவிட்டும் (232), பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (17 விக் கெட்), குருணல் பாண்ட்யா, ஹேசில்வுட், ராசிக் சலாமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
மும்பை அணி 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (கொல்கத்தா, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக), 7 தோல்வி கண்டு ஏறக்குறைய 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து விட்டது. முந்தைய ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 229 ரன் இலக்கை மும்பை அணி எட்டிப்பிடித்து அசத்தியது. இந்த ஆட்டத்தில் தோற்றால் மும்பை வாய்ப்பு முழுமையாக காலியாகி விடும்.
மும்பை அணியில் பேட்டிங்கில் ரையான் ரிக்கெல்டன் (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 380 ரன்கள்), ரோகித் சர்மா (221), திலக் வர்மா (204), நமன்திர் (256) உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். முதுகு வலி காரணமாக கடந்த ஆட்டத்தை தவறவிட்ட கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர் திரும்பாவிட்டால் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவார். பந்து வீச்சு தான் பலவீனமாக இருக்கிறது. கசன்பார் இதுவரை 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக யாரும் இல்லை. ஜஸ்பிரித் பும்ரா 3 விக் கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். பந்து வீச்சில் எழுச்சி பெற்றால் தான் மும்பை அணியால், பெங்களூருவுக்கு சவால் அளிக்க முடியும்.
மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதால் பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்துகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்பை எதிர்பார்க்கலாம்.