கிரிக்கெட்

ஐபிஎல்: மும்பையை பந்தாடிய சென்னை அணி.! 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் 14 ரன்களும், ஷிவம் துபே 5 ரன்களும், டிவால்ட் பிரேவிஸ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கார்த்திக் சர்மா 18 ரன்களிலும், ஜாமி ஓவர்டான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 101 ரன்களுடனும், அகீல் ஹொசைன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

டி காக் (7), மலேவர், (0), நமன் திர் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 11 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினர்.

எனினும், அவர்கள் இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு சென்னை பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்துகளை வீசினர். அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. திலக் வர்மா 37 ரன்னுக்கு அவுட்டாக, சூர்யகுமார் யாதவும் சிறிது நேரத்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சென்னை அணி, ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், நடப்பு தொடரில் 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.