அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 25வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
கடந்த முறை கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் கேதர் ஜாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இன்று சென்னை அணியில் கேதர் ஜாதவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர்.
ஆரோன் ஃபின்ச் 3 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்த விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் வீசிய 11வது ஓவரில் தேவ்தத் படிக்கல்(33 ரன்கள்) கேட்ச் ஆனார். இதற்கடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ்(0 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர்(10 ரன்கள்) இருவரும் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலி(4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. விராட் கோலி(90 ரன்கள்) மற்றும் சிவம் துபே(22 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது.