Image Credits: AI 
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 23 பேர் அதிரடி கைது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு கும்பல்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரூ.13½ கோடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

23 பேர் அதிரடி கைது

பெங்களூரு உள்பட நாடு முழுவதும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு வில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பல்வேறு கும்பல்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இதல் 23 பேர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரூ.13 கோடி பொருட்கள்

கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 6 செல்போன்கள், ரூ.1 லட் சத்து 6 ஆயிரத்து 433 ரொக்கம், ரூ.13 கோடியே 37 லட்சம் மதிப்பிலான சூதாட்ட காயின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13 கோடியே 39 லட்சத்து 16 ஆயிரத்து 433 ஆகும். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 17 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் கைதான 23 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.