கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் பஞ்சாப்

பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் லக்னோவில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்கத்தில் குல்கர்னி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் பூரன் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஷ் இங்கிலிஷ், ஆயுஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடினர்.ஆயுஷ் பதோனி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜோஷ் இங்கிலிஷ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து 72 ரன்கள் எடுத்தார். பின்னர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ரன் ஏதுமின்றி அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங், அதிரடியாக அடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். கூப்பர் கானலி 18 ரன்களில் போல்ட் ஆனார்.

பிரப்சிம்ரன் சிங் 21 ரன்கள் எடுத்தபோது, அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 7-வது ஓவரில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனக்கு வந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதன் பிறகு பிரப்சிம்ரனின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர். மறுபுறம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இதையடுத்து பிரப்சிம்ரன் சிங் 69(39) ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இறுதியில் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ், தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.