பெங்களூரு,
ஐபிஎல் 2026 தொடரின் 34-வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். பவர்பிளே முடிவில் 57 ரன்கள் குவித்தனர். இதில் சுதர்சன் 33 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.
தொடர்ந்து இருவரும் ரன் குவிக்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அப்போது 32 ரன்கள் அடித்திருந்த கில், சுயாஷ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து பட்லர் களமிறங்க மறுமுனையில் பெங்களூருவின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட சாய் சுதர்சன் 57 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அடுத்த பந்திலேயே ஹெசல்வுட்டிடம் அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், சந்தித்த 2-வது பந்தை சிக்சருக்கும் 3-வது பந்தை பவுண்டரிக்கும் அடித்து அசத்தினார். மறுபுறம் பட்லர் 25 (16) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ஹோல்டர் சிக்சர், பவுண்டரிகளை விளாச ஸ்கோர் 200-ஐ கடந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் சுயாஷ், ஹேசல்வுட், புவனேஷ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.
பெத்தேல், கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பெத்தேல் 14 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த படிக்கல், கோலியுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரின் அதிரடியால், அணியின் ஸ்கோர் வேகமாக உயரந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், படிக்கல் 55 ரன்னிலும், கோலி 81 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.