கிரிக்கெட்

ஐபிஎல்: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 45-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஹெட்டும், இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஹெட், அரைசதமடித்து 61 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வலுவான நிலையில் இருந்தது. ஆனால் ஹெட்டும், இஷான் கிஷனும் ஆட்டமிழந்தது, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கிளாசன் (11), ரவிச்சந்திரன் (4), அனிகேத் வர்மா (6), சலில் அரோரா (2), கம்மின்ஸ் (10) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஆலன் மற்றும் ரஹானே அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ரஹானே நிதானமாக விளையாடி 43 ரன்களும், ஆலன் அதிரடியாக விளையாடி 29 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ரகுவன்ஷியும் பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.