கிரிக்கெட்

ஐ.பி.எல். பிளேஆப் இடங்கள் 2 தினங்களில் முடிவு; கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டிக்கான பிளே ஆப் இடங்கள் இன்னும் 2 தினங்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்று உள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.மே 24-ந்தேதி வரை ‘லீக்’ ஆட்டங்கள் நடைபெறு கிறது.

மொத்தம் 70 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. ‘லீக்’ போட்டிக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டது.பிளேஆப் சுற்று நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான பிளே ஆப் இடங்கள் இன்னும் 2 தினங்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, ‘பிளேஆப் போட்டிக்கான (குவாலிபயர் -1, எலிமினேட்டர், குவாலி பயர் -2, இறுதி ஆட்டம்) இடங்கள் 48 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த 2 தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.

கடந்த ஆண்டு நடை பெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெங்களூரு சாம்பியன் பட்டம் பெற்றது. பஞ்சாப் அணி 2-வது இடம் பிடித்தது. இதனால் அந்த அணிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பிளேஆப் சுற்று இடங்கள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.