சென்னை,
5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்று சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை (23-ந்தேதி) மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளும் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரன் ரேட் அடிப்படையில் மும்பை 7-வது இடத்திலும், சென்னை 8-வது இடத்திலும் உள்ளன.சி.எஸ்.கே. முதல் 3 ஆட்டங்களில் தோற்று பின்னர் 2 வெற்றிகளை பெற்றது. கடைசியாக ஆடிய போட்டியில் தோல்வியை சந்தித்தது. மும்பை அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பிறகு, கடந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதாக இருக்கும்.
நட்சத்திர வீரர் தோனியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழங்கால் காயத்தால் அவர் இந்த சீசனில் இதுவரை விளையாடவில்லை. பயிற்சியில் ஈடுபட்டாலும், முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை களமிறக்க சி.எஸ்.கே. நிர்வாகம் திட்டமிட்டது.தோனி உடல் தகுதியுடன் இருப்பதால் நாளை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக அவர் மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தோனி எந்த நிலையில் ஆடுவார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் ‘இம்பாக்ட்’ வீரராக அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் நாளையை போட்டியில் ரோகித் சர்மாவும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.